இந்து சமய கலாசார திணைக்களத்தின் அனுசரணையுடன் அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சுவாமி விபுலானந்தரின் துறவற நூற்றாண்டு விழாவும் பாடசாலை மாணவர்களுக்கான பஞ்சபுராண சுடர் விருது வழங்கும் நிகழ்வும் (19) அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்ற கட்டடத்தில் இடம்பெற்றது.
இந்து இளைஞர் மன்றத்தின் தலைவரும் இறைபணிச்செம்மலுமான த.கயிலாயபிள்ளையின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வுகளில் பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஜெகராஜன் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் ஆலையடிவேம்பு கோட்டக்கல்விப்பணிப்பாளர் கீ.கமலமோகனதாசன் அம்பாரை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் கு.ஜெயராஜி உள்ளிட்ட சமய சமூக தலைவர்கள் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் விபுலானந்தரின் சிறப்பு பற்றி மாணவர்கள் உள்ளிட்டவர்களினால் உரை நிகழ்த்தப்பட்டதுடன் பஞ்ச புராண போட்டியினை மாணவர்களிடையே அறிமுகப்படுத்திய அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்தை அனைவரும் பாராட்டி பேசினர்.
இதேநேரம் த.கயிலாயபிள்ளை தமிழ் இலக்கிய பேரவையினால் பொன்னாடை போர்த்தி வாழ்த்துப்பா வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் அதிதிகளும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.