நல்வாழ்வு தரும் நவராத்திரி விழா !!! - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

புதன், 24 செப்டம்பர், 2025

நல்வாழ்வு தரும் நவராத்திரி விழா !!!

 


புரட்டாசி மாதம் ஒரு புனிதமான மாதமாகும். கன்னி ராசியில் சூரியன் பிரவேசிக்கும் இம்மாதத்தில் பெண் தெய்வ வழிபாட்டால் பெருமை சேரும் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். 


எனவே சக்தி வழிபாட்டால் சஞ்சலம் தீர்க்கும் மாதமான புரட்டாசியில் வரும் நவராத்திரி விழாவை கொண்டாடினால் நலம் யாவும் வந்து சேரும் என்பது நம்பிக்க. ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலுக்கும் மூல காரணமாக விளங்கும் தெய்வங்களான சிவன், பிரம்மா, விஷ்ணுவின் துணைவியர்களான துர்க்கை, சரஸ்வதி, லட்சுமி ஆகிய தெய்வங்களை பூமாலை சூடியும், பாமாலை பாடியும் வழிபட்டால் பிரச்சினைகள் அகலும். பொருள் செல்வம் கூடும். வாழ்க்கையில் சங்கடங்கள் நீங்கி, வெற்றி வாய்ப்புகள் பெருகும் என்பது ஐதீகம். அந்த அடிப்படையில் உருவானதுதான் நவராத்திரி விழா.

சிவனுக்கு உகந்தது 'சிவராத்திரி'. அதேபோல அம்பிகையை கொண்டாட உகந்த நாள் 'நவராத்திரி' ஆகும். 'நவம்' என்றால் 'ஒன்பது' என்றும், 'ராத்திரி' என்றால் 'இரவு' என்றும் பொருள்படும். ஒன்பது இரவு களில் அம்பிகையை கொண்டாடி, விரதம் இருந்து வழிபட்டு வந்தால் பொன், பொருள்கள் குவியும் என்று சாஸ்திரம் சொல்கிறது.

புரட்டாசி மாதம் அமாவாசைக்கு அடுத்த நாள் தொடங்கி ஒன்பது நாட்கள் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு நவராத்திரி விழா புரட்டாசி மாதம் 6-ம் நாள் (22.9.2025) அன்று ஆரம்பமாகிறது.

அன்றைய தினம் முதல் இல்லங்களிலும், ஆலயங்களிலும் கொலு வைக்கத் தொடங்குவர். 30.9.2025 அன்று துர்க்காஷ்டமி, 1.10.2025 அன்று சரஸ்வதி பூஜை, 2.10.2025 அன்று விஜயதசமி நிகழ்வோடு நவராத்திரி முடிவடைகிறது.

இந்த நாட்களில் முப்பெரும் தேவியரை வழிபட்டால் ஒப்பற்ற வாழ்க்கை அமையப்பெறும் என்பது நம்பிக்கை. ஒருவர் வாழ்க்கையில் கல்வி, செல்வம், வீரம் மூன்றும் இருந்தால்தான் கல்வியால் ஈட்டிய செல்வத்தை காப்பாற்றி வைத்துக் கொண்டு, வாழ்க்கை நடத்த இயலும். எனவே தான் 'வீரம்' தரும் துர்க்கா தேவியை முதல் மூன்று நாட்களும், 'செல்வம்' தரும் லட்சுமியை அடுத்த மூன்று தினங்களும், 'கல்விச் செல்வம்' தரும் சரஸ்வதியை அடுத்த மூன்று நாட்களும் முறையாக பூஜை செய்து வழிபட வேண்டும் என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர். அவ்வாறு வழிபட்டால் இல்லத்தில் சுப நிகழ்வுகள் ஏராளமாக நடைபெற தொடங்கும் என்பது முன்னோர் வாக்கு.

தேவியின் அருள் கிடைக்க தேவர்கள் கடும் தவம் செய்தனர். இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி ஆகிய மூன்று சக்திகளின் பேரருளையும் பெற முயற்சி எடுத்தனர். தேவர்கள் உடலை அசைக்காமல் தவம் செய்த நாட்களில் எல்லா வஸ்துகளும் அசையாமல் இருந்தன. அதன் நினைவாக கொலு வைத்துக் கொண்டாடுகிறோம்.


Post Bottom Ad

Responsive Ads Here

Pages