சுவாமி விபுலானந்த அடிகளாரின் 78 வது மகா சமாதி தினம்!! - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

சனி, 19 ஜூலை, 2025

சுவாமி விபுலானந்த அடிகளாரின் 78 வது மகா சமாதி தினம்!!

சுவாமி விபுலானந்த அடிகளாரின் 78 வது மகா சமாதி தினம்!!

 உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 78 வது மகா சமாதி தினம் நாளை(19) சனிக்கிழமை ஆகும்.

அதேவேளை அவர் பண்டிதர் மயில்வாகனாக இருந்து சுவாமி விபுலானந்தரான அதாவது துறவறம் பூண்ட (1924-2024) நூற்றாண்டு விழா பரவலாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் ஓரங்கமாக நாளை(19)  யாழ்ப்பாணத்தில் சுவாமியின் துறவற நூற்றாண்டு விழா ஆரம்பமாகிறது.

யாழ்ப்பாணத்தில் வரலாறு காணாத முதல் விழா!

புத்தசாசன மற்றும் சமய விவகாரங்களுக்கான அமைச்சு, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகம், யாழ்ப்பாண பிரதேச செயலகம், அகில இலங்கை இந்து மாமன்றம் மற்றும் யாழ்ப்பாண தமிழ்ச் சங்கம் ஆகியன இணைந்து வரலாற்றில் முதல்முறையாக மாபெரும் துறவற நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட இருக்கிறது 

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் ய.அனிருத்தனனின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக இலங்கை பாராளுமன்றத்தின் சபாநாயகர் வைத்திய கலாநிதி ஜெகத் விக்ரமரத்ன கலந்து சிறப்பிக்க இருக்கிறார் .

மேலும், புத்தசாசன மற்றும் சமய விவரங்களுக்கான அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி மற்றும் பிரதி அமைச்சர் ஹமகெதற திசாநாயக்க ஆகியோரும் கலந்து கொள்கின்றார்கள் .

அத்துடன் வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் முக்கிய பிரமுகர்கள் கலந்து சிறப்பிக்க இருக்கிறார்கள் .

19 ஆம் தேதி சனிக்கிழமை யாழ்ப்பாணம் மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத்திலிருந்து சுவாமிகளின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்வலம் காலை  ஒன்பது மணிக்கு இடம் பெற இருக்கின்றது .
அதனைத் தொடர்ந்து மானிப்பாய் ஆலயடிச் சந்தியில் சுவாமிகளின் திருவுருவச் சிலை திறந்து வைக்கப்படவிருக்கிறது.

அத்துடன் சுவாமிகள் அன்று அதிபராக இருந்த மானிப்பாய் இந்து கல்லூரியில் ஆரம்ப நிகழ்வுகள் காலையில் நடைபெற இருக்கின்றது.

19ஆம் தேதி மாலை 4 மணியளவில் நல்லூர் ஸ்ரீ துர்காதேவி மணிமண்டபத்தில் இசை அரங்கு இடம் பெற இருக்கின்றது .

மறுநாள் 20ஆம் தேதி காலையில் ஆய்வரங்கும்  மாலையில்  கலையரங்கும்
நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க, 19 மற்றும் 20 ஆகிய இரு தினங்களிலும் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் ஓவியக் கண்காட்சி நல்லூர் திருஞானசம்பந்தர் ஆதின கலா மண்டபத்தில் நடைபெற இருக்கின்றது.

தேசிய இன நல்லிணக்கம்?

இலங்கை எதிர்பார்க்கும்  தேசியநல்லிணக்கம் எது?  என்பதை 100 ஆண்டுகளுக்கு முன்பு தெரிவித்தவர் சுவாமி விபுலானந்த அடிகள்.

இலங்கை எதிர்பார்க்கும்  தேசியநல்லிணக்கம்!   
இலங்கையில் கல்விமுறைமை எப்படி அமையவேண்டும்? இனநல்லிணக்கம் தேசியநல்லிணக்கம் எவ்வாறு அமையவேண்டும்? என்பதை இற்றைக்கு 100வருடங்களுக்கு முன்பே ஓரு தீர்க்கதரிசி சொல்லியிருந்தார்.
அவர்தான் அகிலம் போற்றும் உலகின் முதல் தமிழ்ப்பேராசிரியர் முத்தமிழ்வித்தகன் சுவாமி விபுலாநந்த அடிகளார். ஆம் உண்மையில் அவர்  ஒரு தீர்க்கதரிசி.

அடிகளார் இவ்வவனியில் பிறந்து 133வருடங்களாகின்றன. அவர் பிறந்தது 1892.03.27 இல்.
20ஆம் நூற்றாண்டின் ஈடிணையற்ற பேரறிஞர் சுவாமி விபுலாநந்த அடிகளார் ஆவார்.
அவரது எல்லையற்ற மேதாவிலாசம் காரணமாக உலகின் பல பாகங்களிலும்
அவர் பெயரில் பல அமைப்புகள் இயங்கிவருகின்றன.அவருக்காக பல நூல்கள் எழுதப்பட்டிருக்கின்றன. பல ஆய்வரங்குகள் நடாத்தப்பட்டிருக்கின்றன.
அவர் சிவபதமடைந்தது 19.07. 1947இல். 


தேசிய நல்லிணக்கம் தொடர்பாக சுவாமி விபுலானந்த அடிகளார் அன்று சொன்னது:

' பலமொழிக்கல்வி தேசிய ஒருமைப்பாட்டையும் நாட்டினுள்ளும் நாடுகளிடையேயும் ஜக்கியத்தையும் உறுதிப்படுத்துகின்றது. சர்வதேச நல்லுறவையும் நன்முறையில் விருத்திசெய்வதற்குப் பல மொழிகளை ஆண்களும் பெண்களும் கற்றல் வேண்டும்' என்றார்.
பலதரப்பட்ட பாசைகளைக் கற்பதனால் அறிவு விசாலிக்கும் என்றுகூறிய அவர் 
பாடசாலைகளில் கணிதம் விஞ்ஞானம் போன்ற பாடங்களுக்கு அப்பால் தொழிற்கல்வியையும் வழங்குவதே விரிவுக்கல்வியாகும். நல்லதிடகாத்திரமான உடல்நிலை உவப்பான உளவளர்ச்சி பன்பனவும் கட்டாயமானது என 1941இல் கூறினார்.
அதனால்தான் 1970களில் ஜேவிபி புட்சி அதனைத்தொடர்ந்து பிரதமர் ஸ்ரீமாவோ அம்மையார் இலங்கைமக்களை நாட்டுப்பற்றுடைய மக்களாக மாற்றவேண்டுமெனின் புதிய கல்வித்திட்டத்தை அறிமுகப்படுத்தவேண்டுமென்றெண்ணி க.பொ.த. சா.த பரிட்சை நிறுத்தப்பட்டு பதிலாக தேசிய கல்விச்சான்றிதழ் எனும் புதிய பரிட்சை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது.
முக்கிய பாடங்களுடன் தொழிற்கல்வியும் உடற்கல்வியும் கவின்கலைகளும் கட்டாயபாடமாக்கப்பட்டன.  இம்மாற்றம்  முழுக்கமுழுக்க விபுலானந்த அடிகளாரின் கல்விச்சிந்தனையில் எழுந்ததே என்பதை யாரும் மறக்கமுடியாது.
விரிவுக்கல்வியில் பெரிதும் நாட்டமுள்ள தாகூர் காந்தி பிறந்த நாட்டினில் இன்னும் விரிவுக்கல்வி நடைமுறையில் இல்லையென்பது இவ்வண் ஈண்டு குறிப்பிடத்தக்கது.
அப்படி இனங்கள் ஒன்றாக நல்லிணக்கத்துடனும் இனசௌயன்யத்துடனிருக்கவேண்டும் என்பதை அன்றே சிந்தித்தவர் சுவாமிகள். சிங்களமும் இஸ்லாமும் அறபும் சமஸ்கிருதமும் அவர் தோற்றுவித்த கல்லடி சிவானந்தாவில் கற்பிக்க ஏற்பாடுசெய்தவர். காத்தான்குடி முஸ்லிம்மாணவர்களும் பயிலவேண்டுமென்பதற்காக அவர் சிவானந்தாவை கல்லடியில் அமைத்தார்.
சுவாமியின்  மகாசமாதி தினம் மற்றும் நூற்றாண்டு தின விழா சிறப்பாக அமைய இறைவனைப்பிரார்த்திப்போமாக

விபுலமாமணி வித்தகர் வி.ரி.சகாதேவராஜா (M.Ed.) ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளர், விரிவுரையாளர்,
காரைதீவு சுவாமி விபுலானந்த ஞாபகார்த்த பணிமன்ற முன்னாள் தலைவரும் ஆலோசகரும்.


 

Post Bottom Ad

Responsive Ads Here

Pages