“பாரம்பரியமிக்க கதிர்காம புனித பாதயாத்திரையையும் அதற்கு சிறப்பு சேர்க்கும் காட்டுப் பாதையையும் பாதுகாப்போம்” - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

திங்கள், 24 ஜூன், 2024

“பாரம்பரியமிக்க கதிர்காம புனித பாதயாத்திரையையும் அதற்கு சிறப்பு சேர்க்கும் காட்டுப் பாதையையும் பாதுகாப்போம்”

 இலங்கையில் இந்துக்கள் ஆண்டுதோறும் மேற்கொள்ளும் கதிர்காமத்திற்கான புனித பாதயாத்திரை இலங்கையில் உள்ள ஒரே ஒரு பழமை வாய்ந்த பாதயாத்திரையாகும். இது இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பாரம்பரியத்தைக் கொண்டதாகும். இலங்கையின் வடக்கில் உள்ள செல்வச்சந்நிதி முருகன் கோயிலில் இருந்து கிழக்குக் கரை ஓரமாக தெற்கில் உள்ள கதிர்காமம் முருகன் கோயில் வரை இப்புனித பாதயாத்திரை மேற்கொள்ளப் படுகிறது.

*முருகனும் வீரபாகுத் தேவரும் பயணம் செய்த பாதை.*
முருகனும், வீரபாகுத் தேவரும் இலங்கையின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள உகந்தைக் கடற்கரையில் வந்திறங்கி, அங்கிருந்து காட்டின் ஊடாக பயணம் செய்து கதிரமலையை அடைந்து, அங்கு பாடி வீடு அமைத்து அங்கிருந்து சூரனை வதம் செய்ததாக ஐதீகமாகக் கூறப் படுகிறது. அவ்வாறு முருகனின் பாதம் பட்ட இப்பாதையூடாக, அவனின் அடியொற்றி, இந்தியாவில் இருந்து சித்தர்களும், முனிவர்களும், யோகிகளும், ஞானிகளும் கதிர்காமத்துக்கு வந்து முருகப் பெருமானைத் தரிசித்து சென்றுள்ளனர். இலங்கையில் இருந்தும் சித்தர்கள், யோகிகள் பலர் பாதயாத்திரை மேற்கொண்டு முருகனை வணங்கிச் சென்றுள்ளனர்.
*30,000 யாத்திரீகர்கள் பயணம் செய்யும் புனித பாதயாத்திரை.*
இப்புனித பாதயாத்திரையில் இலங்கையில் உள்ள பல பகுதிகளிலும் இருந்து சுமார் 30,000 பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். எனினும் அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் இருந்தே அதிகளவான யாத்திரீகர்கள் பாதயாத்திரையாக வருகின்றனர். இவ்விரு மாவட்டங்களிலும் இருந்து 80 சதவீத பக்தர்கள் புனித யாத்திரை வருகின்றமை குறிப்பிடத் தக்கது.
யாத்திரீகர்கள் நடந்து செல்லும் காட்டுப்பாதை பண்டைய காலத்தில் கிழக்குக் கரையோரத்தில் உள்ள பெரும் காடுகளையும், சிறு சிறு பட்டினங்களையும் ஊடறுத்து கதிர்காமம் வரை சென்றுள்ளது. இப்பாதயாத்திரை ஊடறுத்துச் செல்லும் காடுகளில், இலங்கையின் தென்கிழக்கில் உள்ள அடர்ந்த காடு ஆங்கிலேயர் காலத்தில் 1900 ஆம் ஆண்டு வன விலங்குகள் சரணாலயமாகவும், 1938 ஆம் ஆண்டு முதல் தேசிய பூங்காக்களாகவும் பிரகடனப்படுத்தப்பட்டன. காட்டின் கிழக்குப்பகுதி குமண பறவைகள் சரணாலயமாகவும், ஏனைய பகுதி யாள வனவிலங்குகள் சரணாலயமாகவும் பேணிப் பாதுகாக்கப்பட்டன.
*கந்தசுவாமிக் கடவுளின் புனிதவனம்.*
இக்காடுகள் ஊடாக மேற்கொள்ளப்படும் கதிர்காமத்திற்கான புனித பாதயாத்திரை இலங்கை மக்களின் குறிப்பாக இந்துக்களின் மிகப்பெரிய பாரம்பரிய சொத்தாகும். அது போல முருகப்பெருமான் பயணம் செய்த, அவரின் காலடிபட்ட, அகத்திய முனிவர் முதல் யோகர் சுவாமிகள் வரை நடந்து சென்ற காட்டுப் பாதையும் எமது பாரம்பரிய சொத்தாகும். இக்காட்டை சிங்கள மொழியில் “கத்தரகம தெவியன்கே அடவிய” என அழைக்கின்றனர். தமிழில் “கந்தசுவாமிக் கடவுளின் புனித வனம்" என அழைக்கப்படுகிறது.
இக்காட்டில் பல்வேறு வகையான உலர் வலய மரங்களும், அரிய வகையான பல மூலிகைச் செடிகளும் வளர்கின்றன. 45 வகையான மிருகங்களும், 255 வகையான பறவை இனங்களும், ஆயிரக்கணக்கான பூச்சி வகைகளும் இங்கு வாழ்கின்றன. இக்காட்டினூடாக நாம் மேற் கொள்ளும் பாதயாத்திரையைப் பேணிப் பாதுகாப்பது போல, இப்பாத யாத்திரை நிகழும், பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் மற்றும் மூலிகைகள் நிறைந்த இக்காட்டையும் பேணிப் பாதுகாப்பது எமது தார்மீகக் கடமையாகும்.
உண்மையில் இந்தக் காடு நமக்கு சொந்தமானதல்ல. இக் காட்டையே நம்பி வாழும் மிருகங்கள், பறவைகள் மற்றும் உயிரினங்களுக்கே சொந்தமானது. எனவே அவ் உயிரினங்களுக்கு எந்தவித பாதிப்புகள் ஏற்படாத வகையில் நாம் இந்தக் காட்டைப் பயன்படுத்த வேண்டும்.
*பாதயாத்திரீகர்கள் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய விடயங்கள்.*
எதிர்வரும் 30 ஆம் திகதி தொடக்கம் உகந்தை முதல் வீரச் சோலை வரை உள்ள குமன, யாள மற்றும் கட்டகாமம் காட்டில் நடந்து செல்லும் பாத யாத்திரீகர்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விடயங்கள் பல உள்ளன. அவையாவன,
1) பொலிதீன் பைகள் மற்றும் சொப்பிங் பேக் ஆகியவற்றை காட்டுக்குள் கொண்டு செல்வதைத் தவிர்க்க வேண்டும். முடியுமானவரை துணியினால் செய்யப்பட்ட பைகளைப் பயன்படுத்த வேண்டும்.
2) தவிர்க்க முடியாத காரணத்தினால் பொலித்தீன் பைகள் மற்றும் பிஸ்கட் பாக்கெட்டுக்கள் ஆகிவற்றைக் கொண்டு சென்றால் அவற்றின் வெற்றுப் பைகளை காட்டில் கண்ட இடங்களில் வீசாமல் உங்கள் பைகளில் வைத்துக் கொண்டு போய் குப்பைத் தொட்டிகள் உள்ள இடத்தில் போட வேண்டும்.
3) நீங்கள் கொண்டு செல்லும் பால்மா, சீனி, தேயிலை ஆகியவற்றை ஒரு சிறிய பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு எடுத்துக் கொண்டுவந்து பயன்படுத்துவது சாலச் சிறந்தது. இப்படிச் செய்வதால் சொப்பிங் பேக் பாவனை இன்னும் குறைவடைகிறது.
நீங்கள் வீசும் பொலித்தீன் பைகளில் உள்ள எஞ்சிய உணவுப் பொருட்களை உண்ணும் மான், முயல் போன்ற சிறிய விலங்குகள் பொலித்தீன் பைகளுடன் அவற்றை உண்டு உயிர் விடுகின்றன.
4) ஒருவர் இரண்டு குடிநீர் பொத்தல்களை மட்டுமே கொண்டு செல்வது நல்லது. அவற்றில் நீர் தீர்ந்து விட்டால், காட்டுப்பாதை வழியில் உள்ள பிளாஸ்டிக் நீர்த்தொட்டிகள் மற்றும் தன்னார்வத் தொண்டு அமைப்புகளின் பவுசர் வண்டிகள் ஆகியவற்றில் இருந்து நீரை நிரப்பிக் கொள்ள வேண்டும்.
5) நீங்கள் கொண்டு செல்லும் ஜூஸ் போத்தல்களில் உள்ள ஜூசை குடித்த பின் வெற்றுப் பொத்தல்களை கண்ட இடத்தில் வீச வேண்டாம். அவற்றை உங்கள் பைகளில் வைத்து எடுத்து வந்து குப்பைத் தொட்டிகளில் போட வேண்டும்.
நீங்கள் வீசும் வெற்றுப் பிளாஸ்டிக் பொத்தல்கள் காட்டுச் சூழலை மாசடையாகக் செய்கின்றன. காட்டின் அழகையும், வனப்பையும் கெடுக்கின்றன.
6) காட்டில் தேநீர் சுடவைத்துக் குடிக்கவும், உணவு சமைக்கவும், இரவில் மிருகங்களிடம் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும் தீ மூட்டுபவர்கள் தமது வேலை முடிந்தவுடன் அந்தத் தீயை முற்றாக அணைத்து விட்டுச் செல்ல வேண்டும்.
காட்டில் தீ மூட்டுவது தடை செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் தப்பித்தவறி காட்டில் தீ பிடித்து பரவினால் பசுமையான காட்டின் பெரும்பகுதி கருகி அழிந்து விடும். காடுகள் எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ அந்தளவுக்கு மழை அதிகம் கிடைக்கும்.
7) தற்காலிக கூடாரங்கள் அமைக்க காட்டில் மரங்களை வெட்டுவதும், பழங்களைப் பறிக்க கிளைகளை முறிப்பதும் முற்றாக தவிர்க்கப்பட வேண்டும். இதுவும் தடை செய்யப்பட்ட நடவடிக்கையாகும்.
😎
காட்டில் மது பாவனை முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும்.
*மேலே குறிப்பிட்டுள்ள விடயங்களை நாம் சரியாகக் கடைப் பிடிப்போமானால் நமது பாதயாத்திரை எதிர்காலத்தில் எந்தவிதமான இடையூறும் இன்றி சிறப்பாக நடைபெறும் என்பதை பாத யாத்திரீகர்கள் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும்.*
இலங்கையில் உள்ள பாதயாத்திரை சங்கங்கள் மற்றும் குழுக்கள் வருடாவருடம் பக்தர்களை பாதயாத்திரையாக அழைத்துச் சென்று, முருகப்பெருமானின் தரிசனம் காணச்செய்து, அவர்களின் மனக் குறைகளை நீக்கி, நேர்த்திக் கடன்களை நிறைவுசெய்து, முருகனின் அருள் பெறச் செய்யும் சிறப்பான காரியத்தை செய்து வருகின்றன. இச்சங்கங்கள் மற்றும் குழுக்கள் காட்டைப் பாதுகாக்கும் மேற்குறிப் பிட்டுள்ள அறிவுறுத்தல்களை தமது பக்தர்களுக்கு அவசியம் வழங்க வேண்டும்.
நாம் மேற்கொள்ளும் இச்செயற்பாடுகள் மூலம் இந்தக் காட்டையே நம்பி வாழும் சிறிய விலங்குகளான மான், முயல் போன்றவை உயிர் ஆபத்தில் இருந்து தப்பும். காடும் இயற்கை அழகுடன் மிளிரும்.
இயற்கையை அழிக்காமல், மாசு படுத்தாமல் பேணிப் பாதுகாத்தல் என்பது இயற்கையோடு ஒன்றி வாழும்,
நம்மை விட அறிவு குறைந்த விலங்குகள், பறவைகள் மற்றும் உயிரினங்களுக்கு நாம் செய்யும் மிகப்பெரிய புண்ணிய காரியமாகும்.
இது சுற்றுச் சூழலுக்கு மட்டு மல்ல நமது மனதுக்கும் இனிமை தரும் விடயமாகும். நம்மைச் சுற்றி பசுமை இருக்குமேயானால் நம் மனதும் பசுமையாக இருக்கும்.
பாரம்பரியமிக்க இப் புனித பாத யாத்திரையைப் பாதுகாப்போம்.
இப்பாத யாத்திரைக்கு பலம் சேர்க்கும் பாரம்பரிய காட்டுப் பாதையையும்,
அதைத் தன்னகத்தே கொண்ட காட்டையும் பாதுகாப்போம்.
*கலாநிதி என்.கே.எஸ். திருச்செல்வம்*
வரலாற்று ஆய்வாளர்
(ஒருங்கிணைப்பாளர் - இலங்கை யாத்திரை சபை)
𝗦𝗣𝗔𝗡𝗗 𝗠𝗘𝗗𝗜𝗔 𝗧𝗘𝗔𝗠
𝗦ocial 𝗣ioneer 𝗔ttitude 𝗡etworking for 𝗗evelopment 〖𝗦𝗣𝗔𝗡𝗗〗


Post Bottom Ad

Responsive Ads Here

Pages