கிழக்கில் புகழ் பெற்ற காரைதீவு கண்ணகியம்மன் ஆலய திருக்குளிச்சி நிகழ்வின் கட்டுப்பாடுகள்! - Karaitivu.org

Breaking

Friday, May 29, 2020

கிழக்கில் புகழ் பெற்ற காரைதீவு கண்ணகியம்மன் ஆலய திருக்குளிச்சி நிகழ்வின் கட்டுப்பாடுகள்!
கற்பூரச்சட்டி ஏந்துதல் அங்கப்பிரதட்சணத்திற்கு தடை குளிர்த்தி சடங்கு நடக்கும் ஆனால்  பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு
காரைதீவு கண்ணகை அம்மனாலய சடங்குபற்றிய கூட்டத்தில்  தீர்மானங்கள்..

 வரலாற்றுப்பிரசித்திபெற்ற காரைதீவு   கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்திச்சடங்குகள் யாவும் வழமைபோல் நடைபெறும். ஆனால்  அங்கப்பிரதட்சணம் மற்றும் கற்பூரச்சட்டி ஏந்துதல் போன்ற நேர்த்திகளுக்கு அனுமதி இல்லை. மேலும் பக்தர்கள் ஆலயத்துள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

இவ்வாறானதொரு தீர்மானம் காரைதீவில் (27.05.2020)நடைபெற்ற உயர்மட்டக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

வரலாற்றுப்பிரசித்திபெற்ற காரைதீவு  கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி வைபவம் எதிர்வரும் ஜூன் 1ஆம் திகதி கதவுதிறத்தலுடன் ஆரம்பமாகி 9ஆம் திகதி அதிகாலை திருக்குளிர்த்தி பாடலுடன் நிறைவடையும்.

காரைதீவு  கண்ணகை அம்மன் ஆலயத்தின் வருடாந்த திருக்கதவு திறப்பதும் மற்றும் பூஜை சடங்கு  நிகழ்வுகளும் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா  அசாதாரணசூழ்நிலையில்  எவ்வாறு நடாத்துவது என்பது பற்றிய கலந்துரையாடலும்கூட்டமும் (27.05.2020) காரைதீவு பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன்  தலைமையில்  பிரதேச செயலக ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்கழ்வில்  காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில்  சுகாதாரவைத்தியஅதிகாரி டாக்டர் றிஸ்னி முத்    மாவட்ட செயலக கலாசார உத்தியோகத்தர் கே.ஜெயராஜ்    சம்மாந்துறை பொலிஸ்நிலைய உதவி பொறுப்பதிகாரி காரைதீவு இராணுவ முகாம் பொறுப்பதிகாரி கண்ணகை அம்மன் ஆலய தர்மகர்த்தாக்களான ப.இராஜமோகன் இ.குணசிங்கம் மற்றும் பரிபாலன சபையின் கணக்காளர் பி.ஞானேந்திரன்  மற்றும் பலர் கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர்களின் கருத்துக்களை தெரிவித்தனர்.

அங்கு எடுக்கப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

ஆலயக்கிரியைகள்  சடங்குகள் யாவும் வழமைபோல் நடாத்தலாம். ஆனால் அனைத்தும் தேசிய சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக மட்டுப்படுத்தப்பட்டஅளவில் நடைபெறல்வேண்டும்.

ஆலயத்துள் ஒரே நேரத்தில் அனுமதிக்கப்பட்ட பத்து(10)பேர் மாத்திரமே அனுமதிக்கப்படுவர். ஆலயத்திற்கு வரும் அவர்கள்  கட்டாயம் கைகழுவி மாஸ்க் அணிந்து சமுகஇடைவெளியைப்பேணவேண்டும்.

1ஆம் திகதி மாலை 5மணிக்கு இடம்பெறும் வழமையான கடல்நீர் எடுக்கும் நிகழ்வு மற்றும்  கல்யாணக்கால் வெட்டும் நிகழ்விலும் அனுமதிக்கப்பட்ட 10பேர் மாத்திரமே கலந்துகொள்ள  அனுமதிக்கப்பட்டுள்ளது. செல்லும் பாதையில் நிறைகுடம் வைப்பதில் தடையில்லை. ஆனால் மக்கள் கூடிநிற்பது தடைசெய்யப்பட்டள்ளது. இதற்கு பொலிசாரினதும் இராணுவத்தினரினதும் உதவி பெறப்படும்.

நேர்த்தி காவடிக்கு வாய்ப்பில்லை. மக்கள்  ஊர்வலத்தின்பின்னால் செல்வதைத்தவிர்த்து வீட்டு வாயலில் நின்று அம்பாளைத்தரிசிக்கலாம்.

கல்யாணக்கால் நடும்  வைபவம் அன்று இரவு குறித்த 10பேருடன் மாத்திரமே நடைபெறும். பக்தர்களோ யாரோ அனுமதிக்கப்படமாட்டார்கள்.

கல்யாணக்காலுக்கான சாறிகள் மடைப்பெட்டிகள் அடையாளங்கள் மடிப்பிச்சை போன்ற மக்களிடமிருந்து பெறப்படும் பொருட்களை ஆலய நிருவாகத்தினர் வீதிவீதியாகச்சென்று சேகரிக்க ஏற்பாடு செய்யப்படும்.மக்கள் அவர்களிடம் அவற்றை வழங்கலாம். ஆலயத்திற்கு செல்லவேண்டிய அவசியமில்லை.

சடங்கு இடம்பெறும் ஏழுநாள் தினப்பூஜைக்கும்  அனுமதிக்கப்பட்ட 10பேர் மாத்திரமே அனுமதிக்கப்படுவர். மதியபூஜை பகல்12மணிதொடக்கம் 2மணிவரை நடைபெறும்.அதேபோல் மாலைநேரபூஜை மாலை5மணி தொடக்கம் 8மணி வரை நடைபெறும். இவை வழக்குரைக்காதை பாடல் குளிர்த்தி பாடல்  அனைத்தும் ஒலிபெருக்கியில் ஒலிபரப்பப்படும்.

தினமும் பச்சைகட்டலுக்கான பட்சணம் தயாரிப்பிலீடுபடுவதற்கு 5பேர் சுகாதாரவைத்தியஅதிகாரியின் அனுமதியுடன் அனுமதிக்கப்பவர். பறைமேளம் கொட்டும் இருவரும் அப்படியே அனுமதிபெறவேண்டும்.

அனுமதிக்கப்பட்ட 5தொண்டர்களால் ஊருக்குள்சென்று மடிப்பிச்சை சேகரித்து கொண்டுவரப்பட்டு உலரவைத்து ஆலயத்துள் 3உரல்களை 3 வேறு இடங்களில் வைத்து குற்றப்படும்.வழமையாக  1000 பானைகள் பொங்கி  வைகாசிப் பொங்கல் கொண்டாடுவது வழக்கம்.  ஆனால் அதற்குஇம்முறை அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. உள்பொங்கல் மாத்திரமே இடம்பெறும்.

9ஆம் திகதி இறுதிநாள் அதிகாலை குளிர்த்தி பாடும் சடங்கு வழமைபோல் இடம்பெற்றாலும் அதற்கும் குறித்த பத்துப்பேரே அனுமதிக்கப்படுவர். பக்தர்களுக்கு அனுமதியில்லை. ஆலயசூழலிலும் கூடிநிற்கமுடியாது.
அதேபோல் எட்டாம் நாள் நடைபெறும் எட்டாம் சடங்கு கூட வெளியார் பொங்கலிலின்றி உள்பொங்கலுடன் மாத்திரம் நடைபெறும்.

கடைத்தெருவுக்கு  அனுமதியில்லை.இந்த தீர்மானங்கள் யாவும் ஓரிரு தினத்துள் மக்களுக்கு பிரசுரம் வடிவில் விநியோகிக்கபப்டும்.


No comments:

Post a Comment