நடன நர்த்தனங்களுடன் இன்னிசை இரவாய் சங்கமித்த சிவாநந்தியன் விருது விழா -2018 - Karaitivu.org

Breaking

Thursday, October 4, 2018

நடன நர்த்தனங்களுடன் இன்னிசை இரவாய் சங்கமித்த சிவாநந்தியன் விருது விழா -2018


 முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தர் உருவாக்கிய மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவாநந்த வித்தியாலய மாணவ சமூகத்தின் எழுச்சிக்காகவும் அவர்களின் உயர்ச்சிக்காகவும் பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் பல்வேறுபட்ட ஆக்கபூர்வமான பணிகளை ஆற்றி வருகின்றது. அந்த வகையில் கடந்த சனிக்கிழமை (29-09-2018) பி.ப 5.30 மணிக்கு ஆரம்பமான சிவாநந்தியன் விருது – விழா 2018 சங்கத்தின் தலைவர் திருவாளர் மு.முருகவேள் தலைமையில் கலை நிகழ்வுகளின் சங்கமிப்போடு மிகவும் திறம்பட நடாத்தி முடிக்கப்பட்டது. 

சிவாநந்த வித்தியாலய மாணவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்;ட சிவாநந்தியன் விருது விழா இம் முறை இரண்டாவது தடவையாகவும் சிவாநந்த நாமத்தைச் சிகரம் தொட வைத்துள்ளது என்றே சொல்லலாம். 
சிவாநந்தாவின் தாபகர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தனின் சீரிய சிந்தையில் உருவாகி சுவாமி விஞ்ஞானானந்தரால் ஆசீர்வதிக்கப்பட்ட மண்ணில் விளையும் சிவாநந்தியர்கள் தனித்துவம் மிக்க பண்பாளர்களாக மிளிர்ந்துகொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே. இதனை அவர்களுடைய பண்புசார் செயற்பாடுகள் மற்றும் தொழிற்பாடுகள் நிரூபித்துக் காட்டுகின்றன. 
 
இம்முறை இடம்பெற்ற சிவாநந்தியன் விருது விழாவில் பல்கலைக் கழகத்துக்குத் தெரிவான 27 மாணவர்களுக்கும் தேசிய ரீதியில் விளையாட்டில் சாதனை படைத்த ஒரு மாணவனுக்குமாக மொத்தம் 28 மாணவர்களுக்கு பெறுமதியான விருதும் பணப்பரிசும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. படசாலையின் அதிபர், முன்னாள் அதிபரகள், ஆசிரியர்கள், சாதனையாளர்களின் பெற்றோர்கள், நலன் விரும்பிகள் , சங்கத்தின் ஆலோசகர்கள் மற்றும் உறுப்பினர்கள் சங்கமத்தில் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டது.

இராமகிருஷ்ண மிஷன் பொது மேலாளர் ஸ்ரீமத் சுவாமி தக்ஷஜானந்தஜீ மஹரான் ஆசீர்வாத உரையுடன் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன. சிவாநந்தாவில் இன்றும் உணரக் கூடியதாய் இருக்கின்ற ஆன்மீக உணர்வு பற்றிய சுவாமிகளின் கருத்து அனைவரையும் மனங்கவர வைத்து சிந்திக்கத் தூண்டியது.

சங்கத்தின் தலைவர் மு.முருகவேள் தனது உரையில் சிவாநந்தியன் எனும் நாமத்தின் தனித்துவம் பற்றி ஆழமான கருத்துகளை சிறந்த உதாரணங்களுடன் விளக்கிக் கூறியதோடு வளர்ந்து வரும் சிவாநந்தியர்கள் சமூத்தின் முன்னோடிகளாக மிளிர எவ்வாறான பண்பியல்புகளை கொண்டிருக்க வேண்டும் என்ற கருத்துக்கு அதீத முக்கியத்துவம் கொடுத்தமை அனைத்து சிவாநந்தியர்களுக்கும் சிறந்த உள்ளீட்டினைக் கொடுத்தது.
சிவாநந்தியன் விருது விழாவுக்கான அறிமுக உரையினை வழங்கிய கலாநிதி.து.பிரதீபன் இலங்கைப் பல்கலைக் கழக மாணவர் உள்ளீர்ப்புச் செயன்முறை பற்றிய விளக்கத்தினை புள்ளிவிபரங்களுடன் தெளிவுபடுத்தினார். 

பாடசாலை அதிபர் திருவாளர் ரி.யசோதரன் தனது உரையில் மாணவர்களுக்கு அவசியமான சிறந்த அறிவுரைகளைக் கூறியதோடு பாடசாலை வளர்ச்சியில் சிவாநந்தா பழைய மாணவர் சங்கத்தின் மகத்தான பங்களிப்புக்கள் மற்றும் ஆதரவுச் செயற்பாடுகளைப் பேருவகையுடன் பகிர்ந்துகொண்டார்.  

நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த மட்டக்களப்பு மாநகர முதல்வர் கௌரவ சரவணபவான், சிவாநந்தாவின் வரலாற்றுக் கருத்துக்கள் சிலவற்றை கூறியதோடு பாடசாலை வளர்ச்சியில் பழைய மாணவர் சங்கத்தின் வகிபங்கு பற்றியும் குறிப்பிட்டார். 

சிவாநந்தியன் விருதில் கௌரவிக்கப்பட்ட மாணவர்களின் சுயவிபரங்கள் மற்றும் கருத்துக்களைத் தாங்கிய பிரமாண்டமான காணொலி சிவாநந்த பழைய மாணவர் சங்கத்தின் அலகாக செயற்பட்டுக்கொண்டிருக்கின்ற சிவாநந்தியன் பட்டமுன் மாணவர் சங்கத்தின் நெறியாழ்கையில் காண்பிக்கப்பட்டு சிறந்த வரவேற்பைப் பெற்றது. இதில் வைத்தியத்துறை பட்டமுன் மாணவன் நிதுஷின் ஒருங்கிணைப்பு மிகவும் முன்கியமானதாகப் பார்க்கப்பட்டது.

இன்னிசையும் நர்த்தனமும் இணைந்த அரங்க நிகழ்வுகள் சிவாநந்தியன் விருது விழாவிற்கு புத்துணர்வையும் புதுப்பொலிவையும் அழித்திருந்தமை கண்கூடு. சிவாநந்தாவின் நடன மற்றும் சங்கீத ஆசிரியைகளின் உன்னதமான பங்களிப்பு மற்றும் செயற்பாடு கலை நிகழ்வுகளின் சங்கமிப்புக்கு அத்திவாரமிட்டது. 

இவற்றுக்கப்பால் இளம் சிவாநந்தியன் பிரதீபன் சிற்சபேசன் நடுவண் வகித்து வீணை மற்றும் வயலின் மீட்ட சிவாந்தியர்களான கலாநிதி தெ.பிரதீபன் மற்றும் யூட் நிரோசன் இணைந்து வளங்கிய பல்லிசைக் கதம்பம் ஓர் இன்னிசை இரவாய் பார்வையாளர்களை வசப்படுத்தியது.

சிவாநந்தியன் விருது விழா -2018 க்கு பல சிவாநந்தியர்கள் மற்றும் சிவாநந்த சமூகத்தினர் பண உதவி, புலமைத்துவ உதவி, சரீர உதவி மற்றும் ஆலோசனைகளை வழங்கியிருந்தார்கள். 

சிவாநந்தியன் விருது விழா -2018 சிறப்புற நடந்தேற உதவி புரிந்தவர்களுக்கான நன்றியறிதலை சங்கத்தின் பொதுச் செயலாளர் திருவாளர் சு.பவாநந்தராஜா மிகவும் சுவைபட நிகழ்த்தியிருந்தார். பாடசாலைக் கீதத்துடன் நிகழ்வுகள் முடிவுக்கு வர இராப்போசனத்துடன் கூடிய விருது விழாவாக நிறைவிற்கு வந்தது சிவாநந்தியன் விருது விழா -2018.

வி.ரி.சகாதேவராஜா
No comments:

Post a Comment