korg top cover 0 thwww

karaitivu logo mobile

பேராசிரியர் என்.சண்முகலிங்கன்
முன்னாள் துணைவேந்தர்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

lord murugan picturesஅண்மையில் யாழ்ப்பாணம் வந்திருந்த கதிர்காம ஆலய தியவதன நிலமே, 'யாழ்ப்பாண மக்கள் இப்பொழுது பெருமளவில் கதிர்காமம் வருவதில்லையே' என இங்குள்ள சமயத்தலைவர்களிடையே கவலைப்பட்டுச் சென்ற செய்தியை படிக்க நேர்ந்தது.இந்த கவலையின் காரண காரியங்கள் இலங்கையின் சமூக அரசியல் வரலாற்றுடன் இரண்டறக்கலந்தவை. என் இளமைக்காலமுதலே என் அப்பாவுடன் கதிர்காம யாத்திரை சென்ற காலத்து ஆலய சூழலில் நாங்கள் தங்கிய இந்து மடாலயங்கள் புனித நகர திட்டத்தின்கீழ் துடைத்தழிக்கப்பட்டன. இவற்றினைவிட ஆலய அருகில் இராமகிருஷ்ணமிஷன் அமைத்;திருந்த பெருமடமும் ;நூதனசாலை'யாக்கப்பட்டது. பின்னாளில் முகப்பில் காணப்பட்ட'ஓம்' அழிப்பு வரை தமிழ் மனங்களில் நிறைய வழக்குகள் உண்டு. வரலாறு என்பது இயங்கியல் வழியது; இன்றைய தியவதன நிலமேயின் கவலைகூட இந்த இயங்கியலின் விளைவாகலாம். எப்படியோ இந்த கவலைகளுக்கான மருந்து என்பது கதிர்காமம் பற்றிய ஒரு முழுதளாவிய புரிதலின் வழியேதான் வசப்படலாம்.

2
கதிர்காமத்தின் தொன்மை,அடையாளம் தொடர்பான கருத்துக்கள் , குறித்த இடப்பெயர் ஆராய்ச்சியுடனேயே தொடங்கி விடுகின்றதெனலாம். தத்தமது இனத்துவ அடையாளங்களை (நவாiniஉ னைநவெவைநைள) நிறுவும் முயற்சியாகவே இவை பெரிதும் அமைதலை அவதானிக்கலாம். 'செந்தினைக் கதிர்கள் நிரப்பிவைத்த கமம்' இ
கதிர் 10 கமம் என்பதே கதிர்காமமானது என்பது அ.சி.கிவம்(1954:5) தரும் விளக்கம்.

'கதிர்காமம் கார்த்திகேய கடவுளுக்கு உவப்பானது. கார்த்திகேயன் கிராமம் என்பது சிதைந்து கஜரகம் என்றாய், பின் கதரகாமம் என்றாயிற்று. இவ்வாலயத்தில் முக்கிய வழிபாடு செய்யும் தமிழர்கள் இந்நாமத்தை தமிழ் ரீதியாகக் கதிர்காமம் என்றாக்கிவிட்டனர். கதிர்காமம் திவ்விய ஒளியும் அன்பும் பிரகாசிக்கும் ஷேத்திரம். கதிர்- ஒளி: காமம் - அன்பு'
என்பது சேர். பொன். அருணாச்சலத்தின் (1995:3) கருத்தாகும்.

'கதிர்காமம் என்பது சிங்களக மொழிச் சொல்லின் மரூஉவாய்த்தழிழ் மொழியின் கண் திசைச் சொல்லாய் பிற்காலத்தில் வழக்கில் வந்ததென்பதே எமது கொள்கை. அக்கொள்கைக்கேற்ப, கதிரு மரங்களையுடைய ஊர் எனப் பெயர்க் காரணம் கூறுவதே பொருத்தமாகத் தோன்றுகிறது'
என்பார் குல.சபாநாதன்(1965:24)

'சிங்கள வம்சத்தின் தாதை எனப்படுகின்ற விஜயன், கி.பி 500ம் ஆண்டளவில், கதிரையாண்டவருக்கு ஒரு கோயில் அமைத்தான் என யாழ்ப்பாண வைபவமாலை எடுத்தோதுகின்றது. அக் காலத்தில் சிங்களமொழி உருவாகவில்லை.திரு.சபாநாதன் அவர்கள் கூறும் 'கதிரு' மரமும் முளைக்கவில்லை. விஜயமன்னன் வந்து சிங்கள மொழி பிறக்கு மட்டும் இலங்கையின் பழைய முருகன் கோவில் 'நாமகரணம்' நோக்கிக் காத்துக்கிடந்தது எனத்தொனிக்கவைப்பது தருமமாகாது'
என்பது தென்புலோலியூர் மு.கணபதிப்பிள்ளையின்(1976:24) வாதம்.

தமிழ் இந்துக்கள் கதிர்காமத்தின் தொன்மையை, சிங்கள பௌத்த காலத்திற்கு முன்னையதாகக் கருதுகின்றனர். அதனை ஓர் இந்து ஆலயமாகத் துட்டகைமுனு மீளமைப்பதற்கு முன்னரே நிலவிய வழிபாட்டிடமாகக் கருதுகின்றனர்.

'தமிழ் மக்கள் குறிஞ்சி நிலத்திலே, குறிஞ்சி நில வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்த பண்டைப் பழங்காலத்தில் அமைக்கப்பட்ட திருக் கோயிலே கதிர்காமம் எனல் வேண்டும். சமஸ்கிருத மணமின்றி, மக்கள் வழிபாடியற்றும் முறை இன்றும் அத்திருக்கோயிலிலே வழக்கில் உள்ளது. தொல்காப்பியத்தில் குறிப்பிடப்படும்'கந்தழி' வழிபாடே அது எனலாம்' என்பார் மு.கணபதிப்பிள்ளை (1967)

அரசியல் மாற்றங்களினடியாக அவ்வப்போது இந்துக்களின் கைகளிலிருந்த கதிர்காமத்தின் நிர்வாகம் பின் முற்றாகக் கைமாறியது. இந்த வகையில், பின்னாளில் ஆலய நிர்வாகத்தை இந்துக்களிடம் கையளிக்க வேண்டும் என்ற கோரிக்கை 1908ல் முதன்முதலாகச் சேர்.பொன்.அருணாச்சலம் அவர்களால் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. பின்னாளில் அருணாச்சலம் மகாதேவா தலைமையில் கூடிய அகில இலங்கை இந்து அமைப்புக்களின் ஒன்றியம், தர்க்கரீதியாகத் தமது நியாயங்களை முன்வைத்தது (ஆயாயனநஎய1938). எனினும் இவர்கள் கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்கப்படவில்லை. இந்தக்கோரிக்கையை இன வாத நோக்கில் அன்றைய ஆங்கில நாளிதழ்களும், சிங்கள அமைப்புக்களும் பயன்படுத்தியமை இன்றுவரை எமது வரலாறாகியுள்ளது.

நிர்வாகரீதியான அந்நியமாக்கலின் பின்னரும், கதிர்காம வழிபாட்டு மரபு பெரிதும் இந்துப் பண்புகளுடனேயே தொடர்ந்திடக் காணலாம் வாய்கட்டி பூசை செய்யும் கப்புராளை மரபுக்குப் புறம்பாக, காவடி ஆட்டமும், தூக்குக்காவடியும், கற்பூரச்சட்டியும், தீமிதித்தலும், பிரதிட்டை பண்ணலுமாய் இந்து பக்திஅலையே முதன்மை பெற்று விளங்குவதை இன்றுவரை அவதானிக்கலாம். எனினும் ஐம்பதுகளைத் தொடர்ந்து இத்தகு சடங்குகளிடையேயும் திட்டமிட்ட மாற்றங்கள் உட்புகுத்தப்பட்டமையை அண்மைய மானிடவியல் ஆய்வுகள் வெளிக்காட்டும். எடுத்துக்காட்டாக, தீமிதித்தல் சடங்கின் தலைமைப் பொறுப்பு இந்துக்களிடமிருந்து கைமாறியமையும் பின் எழுபதுகளில் கப்புராளைமாருக்கும் அதில் இடந்தரப்பட்டமையும், தீமிதிப்புக்கு முன் மும்மணிகளின் ஆசிவேண்டி கிரிவிகாரைக்கு முதல் வணக்கம் எனப்புதிய நடைமுறைகள்புகுத்தப்பட்டமையையும் பேராசிரியர்கள் ரிச்சட் கொம்றிச், கணநாத் ஒபயசேகர (புழஅடிசiஉh ரூ ழுடிநலநளநமநசநஇ 1990) ஆய்வுகளில் பதிவுபெறும். இலங்கையில் நிகழ்ந்த சமூக அரசியல் மாற்றங்களோடு இந்த சமயநிலை மாற்றங்களை இணைத்தும் விளக்குவார் பேராசிரியர் ஒபயசேகர.

இத்தனைக்குப் பின்னாலும் தமிழ் இந்துக்களின் கதிர்காம ஈடுபாடு தணிந்ததில்லை என்ற அம்சம் எமது கவனத்திற்குரியது. அவ்வப்போது ஏற்படும் இனக்கலவரங்கள் போக்குவரத்துத் தடைகள் காரணமாக இடையீடு ஏற்பட்ட போதும் ஆர்வம் குறைந்ததில்லை. வாய்ப்புக் கிடைக்கின்ற போதிலெல்லாம் கதிர்காம யாத்திரை உயிர்ப்புடன் மேற்கொள்ளப்படக் காணலாம். கடந்த காலங்களில் வடபகுதி மக்களின் வாய்ப்புக்கள் குறைந்த போதிலும், கிழக்கிலங்கைத் தமிழ் இந்துக்கள் கதிர்காம பாதயாத்திரையை தவறவிடுவதில்லை. இப்பொழுது மீள கதிர்காம யாத்திரையைப் பலரும் தொடர்வதையும் அவதானிக்க முடியும். ஏனையோர் குறைந்தபட்சம் வடக்கில் மாதிரியாகத் தாம் உருவாக்கிய ஆலயங்களில் கதிர்காம உற்சவக் காலத்தில் விழாவெடுத்து நிறைவுகாணலையும் அவதானிக்கமுடியும்.

உண்மையில், கதிர்காமத்தின் தொன்மையும், அது சிங்கள – தமிழ் உரிமை உணர்வுகளுக்கு அப்பால்; பண்பாட்டு மையமாக நின்று நிலைப்பதன் பின்னணியும், வேடர்களின் தெய்வமாக, அவர்கள் வழிபாட்டு மரபுகளின் மூலமாகக் கதிர்காமம், இன்னமும் விளங்குதலின் வழிதான் புரிந்துகொள்ளப்படலாம்.தத்தமது இனத்துவ வட்டங்களுக்குள் கதிர்காமத்தை அடக்கும் முயற்சிகளிடையேயும், ஏனையோர் 'கதிர்காம-வேடர்' உறவினை ஏற்றுக்கொள்ளுவதும் இங்குச் சிறப்பான கவனத்திற்குரியது.


கதிர்காம மலைத்தொடர்கள் அமைந்திருக்கும் பான்மையில் இது சப்பிரகாம மாகாணத்தைச் சேர்ந்த பிரதேசமாகும் என்பது அறிஞர் கருத்தாகும். 'சப்பிரகாமம்' என்பது சபரர்கிராமம் என்பதன் திரிபாகும் எனக்காட்டி, சபரர் என்பார் வேட சாதி வகுப்பைச் சேர்ந்த ஒரு கிளையினர் எனவும் அவர்களுடன் தொடர்புபட்டெழுந்ததே இத்தலம் எனவும் நிறுவுவார் வ. குமாரசாமிப்பிள்ளை (1935)

'வனமுறை வேடர் அருளிய பூசை
மகிழ் கதிர்காமமுடையோனே'

என வேடர் பூசையில் மகிழும் கதிர்காமத்தானைப் பாடுவார் அருணகிரிநாதர். கதிர்காம திருவிழாக்கால ஊர்வல ஆரத்திப் பெண்களாக இன்று வரை வேடமரபினரே தொடர்வதும், இடையிடையே மேலாண்மை ஆதிக்கசக்திகளினால் அவர்கள் ஒதுக்கப்படுவதும், ஒதுக்குதலை எதிர்த்து அவர்கள் போராடி தமது இடத்தினை தக்கவைப்பதும் அண்மைய வரலாறாக பதிவுபெறும் (விவிகா,1997)

உண்மையில் வேடர் தலைவன் மகள் வள்ளியைக் களவு மணம் புரிந்த இடமாகவே கதிர்காமம் பற்றிய இலங்கை மக்களின் ஐதீகம் விளங்குகின்றது. மாறுபடு சூரனை வதைத்தபின் வள்ளியை மணம் புரிய வந்த இடம் இதுவே என்பர் இந்துக்கள். கதிர்காமத்திற்கு மேற்கே சுமார் மூன்று மைல் தொலைவில் மாணிக்கக் கங்கைக் கரையில் அமைந்துள்ளது செல்லக் கதிர்காமம். இங்கு ஒரு பிள்ளையார் கோயிலுமுண்டு. இவ்விடத்திலேயே முருகன் வேண்டுகோளின்படி யானையாகத் தோன்றி வள்ளித் திருமணத்திற்குப் பிள்ளையார் உதவினார் எனவும் இவர்கள் கருதுகின்றனர்.சங்கத் தமிழ் இலக்கியங்களில் ஒன்றான திருமுருகாற்றுப்படை கூறும் ஐந்தாவது படைவீடு கதிர்காமமாகத்தான் இருக்க வேண்டும் என்ற கருத்தும் தமிழ் அறிஞர்களால் முன்வைக்கப்பட்டது.

வடஇந்திய ஸ்கந்த - தெய்வயானை மரபு, முருக- வள்ளி மரபுடன் பின்னாளில் இணைக்கப்பட்ட வேளையிலும்,அதற்கு ஏற்ப உள்ளுர் வழக்காறுகள் இசைவு காணும் முருகனின் இந்திய மனைவியான தெய்வயானை, முருகனை மீண்டும், இந்தியாவுக்கு மீட்டுச்செல்லும் முயற்சி தோல்வியில் முடிய தாமும் இங்கு வந்து மூவரும் மூன்று கோயில்களில் கதிர்காமத்திலேயே தங்கிவிட்டனர் என்பதாகக் புதிய ஐதீகம் அமையும்.

இத்தகு இசைவாக்கம் நிகழ்ந்ததவிடத்தும் ஆலயத்திருவிழா வேளையில் வள்ளியம்மனுக்கே முக்கியத்துவம் தரப்படக் காணலாம். அன்றாட விழாக்கால வீதியுலா வள்ளியம்மன் சன்நிதியை நோக்கியே செல்வதும் தீர்த்தத்திற்கு முதல் நாள் இரவு முருகன் வள்ளியம்மன் சந்நிதிதானத்தில் சில பொழுது தங்கிவருகின்றமையையும் முருகன் வள்ளி நெருக்க இணைவினை குறியீட்டு ரீதியாய் உணர்த்தி நிற்பன. அதேவேளை அந்த வீதியுலா தெய்வயானையை கருத்தில் கொள்ளாமையையும் குறிப்பிடத்தக்கது.

இதனையொத்த வழிபாட்டு நடைமுறைகளை கதிர்காமத்துடன் தொடர்பான மட்டக்களப்பு தமிழக ஆலயங்களிலும் காணமுடியும். சின்னக்கதிர்காமம் எனப்படும் மண்டூர் கந்தசுவாமி கோயில், உகந்தை முருகன் கோயில், செல்லச்சந்நிதி முருகன் கோயில் என்பன இந்தவகையில் குறிப்பிடத்தக்கன. உகந்தை முருகன் கோயிலில் வள்ளியம்மனுக்கு தனி ஆலயம் உள்ளமையும் தெய்வயானையம்மனுக்கு இடம் தரப்படாமையும் இங்கு கவனத்திற்குரியவை.

கதிர்காமத்து வழிபடுபொருள் வழிபாட்டு முறை என்பன ஏனைய இந்து சைவ மரபுகளினின்றும் வேறுபட்டது இங்கு விழாக்கால ஊர்வலத்தில் எடுத்துச்செல்லப்படும் புனித பெட்டியுள் என்ன உள்ளது என்பது அறியப்படாது உள்ளது. முருகனை உருவகிக்கும் யந்திர தகடு ஒன்றே மூலஸ்தானத்துள் உள்ளதென்பது நம்பிக்கை. இதைவிட செஞ்சந்தனக்கட்டையால் செய்யப்பட்டு தங்கத்தகட்டால் பொதிக்கப்பட்ட ஆறுமுருகப்பெருமான் விக்கிரகம் உள்ளதென்ற கருத்தும் முன்வைக்கப்படும். 1922முதல் பஸ்நாயக்காவாக இருந்த உள்விட்ட என்பாரும் 1934வரை இங்கு திருப்பணி ஈடுபாடு கொண்டிருந்த புஞ்சிசிங்கோ என்போரும் கதிர்காம பிரதம குருவும் இதற்கு சாட்சி என்பார் எஸ்.எஸ்.நாதன்( 1965).

இதற்கும் மேலாக இன்று நிலவும் வழிபாட்டு மரபுகளிடை தமிழ் இந்து பக்திவழி வணக்க முறைகளே கதிர்காமத்தில் மேலோங்கி நிற்பதையும் குறிப்பிடவேண்டும்
விளைவாக, இனத்துவ அரசியல் அலைகளை விஞ்சும் இந்த பக்தி அலைக்குள், இன்று அனைத்து இனக்குழக்களும் சங்கமமாகின்றமை சிறப்பான கவனத்துக்குரியது. தமிழர்களைத் தண்டிகவே தீ மிதிப்பு, முள்ளு மிருதடி, தூக்குக் காவடி நேர்த்திகள் என விமர்சிக்கப்பட்டமை (ளுநநெஎசையவநெ 1938)இ இன்று பழங்கதையாய்ப் போயுள்ளது. இன்று கதிர்காமத் தூக்குக் காவடி என்றதும் கரீம் என்ற இஸ்லாமியர் நினைவே மேலெழும். இன்னும் தீமிதிப்பு நேர்த்திக்கடன்களின் சடங்குத் தலைமை கைமாறியபோதும், நடைமுறையில் அனைவரும் சம்பந்தப்படுகின்ற நிலமை. இத்தகு சடங்குகள் கிரியைகளை ஏற்றுக்கொள்ளாத பௌத்த மும்மணிகளே, ஆசி வழங்கவேண்டிய நிர்ப்பந்தம்.

'ஐதீக உருவாக்கம் என்பது சமூகவியல் சார்ந்தது' என்பர் மலினோவ்;ஸ்கி. மலினோவ்ஸ்கியின் இந்த கருத்தியலை மீள வலியுறுத்துவதாகவே கதிர்காமம் தொடர்பான ஐதீக கட்டமைப்பும், இடைச்செருகல்களும்இ நடைமுறைகளும் அமைந்திடக் காணலாம். இலங்கையின் இனமுரண் வரலாறும,; அரசியல் அதிகார சார்பு நிலைகளுக்கும் கதிர்காமமும் விதிவிலக்காக முடியவில்லை ஆனாலும் வேட்டையும் உணவு சேகரித்தலும் இணைந்த பெருங்கற்காலப் பண்பாட்டுக்கும் முன்னைய ஒரு கூட்டுச் சமூக வாழ்வின் பிரதிபலிப்பாய், காலமாற்றத்தால் கூறுபடும் இனத்துவ வேறுபாடுகளுக்கப்பால் மக்கள் சமயம் என்ற பரந்ததோர் உணர்வு வட்டத்துக்குள் அனைத்துப் பண்பாடுகளையும் இசைவாக்கி, தானே ஒரு தனித்துவப் பண்பாட்டுத் தொகுதியாய் கதிர்காமம் விளங்குகின்றதெனலாம்.

உசாத்துணைகள்

அருணாச்சலம் பொ.1962. கதிர்காமவேலன். மொழிபெயர்ப்பு க.இளையதம்பி. யுhழ்ப்பாணம்: ஸ்ரீகாந்தா அச்சகம்
கணபதிப்பிள்ளைஈமு.1967. முருகன் கதிர்காமம்.சென்னை: அருள் நிலையம்
குமாரசுவாமிப்பிள்ளை, வ.1935.கதிரமலைப்பள்ளு யாழ்ப்பாணம்
சபாநாதன், குல.1965.கதிர்காமம் சென்னை: பாரிநிலையம்.
Gombrich,Richard & Obeysekere, Gananath.1990. Buddhism Transformed-
Religious Change in Srilanka. Delhi: Motital banarsidass Publishers Pvt.Ltd.
Mahadeva,A. 1938. A few Facts relating to the Holy Shrine of Lord Skanda at
Kataragama and for the Restoration of its: An Appeal Management to the Hindus.
Colombo: Vivekananda Society and other Hindu Organizations.

சூடான செய்திகள்

புதியவை