korg top cover

korg top cover mob

Kanthsa sasti

உலகெலாம் நிறைந்து விளங்கு கின்ற எல்லாம்வல்ல பரம்பொருளாகிய சிவபெருமானு டைய அம்சமான கந்தனின் விரதங்களுள் ‘கந்த ஷஷ்டி விரதம்’ தனித்துவமான மகிமையை உடையது. இன்று ஆரம்பமாகும் இந்தக் கந்தஷஷ்டி விரதம் சைவ சமயிகளுக்கு முக்கியமான ஒரு சிறந்த விரதமாகும்.கந்தன் கருணை புரியும் இந்தக் கந்த ஷஷ்டி விரதம் ஐப்பசி மாதத்தில் வருகின்ற அமாவாசையை அடுத்து வளர்பிறை பிரதமை முதல் ஷஷ்டி ஈறாக ஆறு நாள்களுக்கு அனுட்டிக்கப்படும். முருகப் பெருமான் சூரபன்மனாதியோரைச் சங்காரஞ் செய்த நாள் ஷஷ்டியாகும். அதுவே கந்தஷஷ்டி என அழைக்கப்படுகிறது.கொடுமையே உருவாக வந்து தேவர்களையும் முனிவர்களையும் ரிஷிகளையும் தவ சிரேஷ்டர்களையும் துன்பத்துக்குள்ளாக்கிக் கொடுங்கோலாட்சி புரிந்த சூரபன்மன், சிங்கமுகன், தாரகன் ஆகியோரை அழிக்கவே முருகன் உதயமாயினான்.

அந்தத் தத்துவத்தை விளக்குவதே இந்த கந்தஷஷ்டி. இந்த அரிய பெரிய முருகனுக்குரிய விரதத்தை முறையாகவே அனுஷ்டிக்கப்பட வேண்டும். இந்த விரதத்தை விளையாட்டாக எண்ணக்கூடாது. “நானும் விரதமிருக்கிறேன்” என்று சொல்லிக்கொண்டு ஐயரிடம் தர்ப்பையையும் வாங்கிக் கைவிரலில் அணிந்து கொண்டு கெட்ட சிந்தனையுடன் இருந்தால் பாவ மூட்டையே வந்து சேரும்.முத்தமிழால் வைதாரையும் வாழவைப்பவன் முருகன், அவனுடைய திருவருட் கருணைத் திறத்துக்குப் பாத்திரமாகி இவ்வுலகில் புத்திர சந்தானம் அடைந்து சகல செளபாக்கியங்களுடன் வாழ்வதற்கு இந்த விரதம் உகந்ததாகக் கருதப்படுகின்றது. முருகன் தமிழ்க் கடவுள். ஆதலால் முருகனுடைய திருவருள் பரிபூரணமாகக் கிட்ட வேண்டுமென்று தமிழ் மக்கள் நோன்பிருக்கும் பிரதான விரதம் இதுவாகும்.சிவபெருமானும் முருகனும் ஒன்றுதான். சிவன் வேறு முருகன் வேறு அல்லர். இருவரும் ஒரே அம்சமானவர் கள்தான். சிவபெருமானுடைய நெற்றிக் கண்ணிலிருந்து ஆறு தீப்பொறிகள் வந்து ஆறு குழந்தைகளாக உருவெடுத்தன. அந்த ஆறு குழந்தைகளையும் ஆசையோடு ஆவல் மீதூரப் பெற்றவளாய் அரவணைத்து அள்ளி எடுத்தாள் ஆதிபராசக்தி யான அம்பிகை உமையவள்.

அவ்வாறு உமாதேவியார் ஆவலாக அரவணைத்து அணைத்தெடுத்த போது ஒரு திருமுருகன் வந்தாங்கு உதித்தனன் உலக முய்ய என்பது கச்சியப்பர் திருவாக்கு. முருகப் பெருமான் உதித்தாரே தவிர பிறக்கவில்லை. இதிலே ஓர் ஆழ்ந்த மிக அர்த்தபுஷ்டி யான கருத்தொன்று தொக்கி நிற்கிறது. அது யாதெனில் சூரியன் ஒவ்வொரு நாளும் மறைந்து போகின்றான்.

பின்னர் மறுநாள் காலையிலே கிழக்குத் திசையிலே உதிக்கின்றார்ன். பின்பு சூரியன் மாலையிலே அழகாக இரத்தச் சிவப்பு நிறமாக மறைகின்றான். அவனுடைய அழகும் உதிக்கின்ற லாவண் யமும் சொல்லில் வடிக்க முடியாத ஒன்று.அதேபோலவே முருகப் பெருமானும் ஆதியும் அந்தமும் இல்லாத ஒருவரே. ஏற்கனவே இருக்கின்ற ஒரு பொருள்தான் மறைந்து பின்பு உதிப்பது போலவே முருகனும் இந்த உலகம் உய்ய சூரபன்மனாதியோரை அழிக்க வந்து உதித்தான் என்பதே இக்கருத்தாகும்.அதனால்தான் கந்தஷஷ்டி விரத கால நாட்களில் கந்த புராணம் படிப்பார்கள். கச்சியப்ப சிவாச்சாரியார் பாடிய இக் கந்த புராணம் முருகனுடைய புகழ்மிக்க வரலாற்றை எடுத்துக் கூறுகின்ற ஒரு தெய்வீக புராணமாகும். இன்று ஆரம்பமாகின்ற கந்தஷஷ்டி விரதம் சைவ மக்களால் பெரிதும் விரும்பி நோற்கப்படுகின்ற ஒரு சிறப்புமிக்க திவ்ய விரதமாகும்.சிவபெருமானுடைய அருட்பெருங் கருணையைப் பெறுவதற்கு சிவராத்திரி விரதமிருப்பது போல முருகனுடைய திவ்ய அருட் பெருங் கருணா கடாட்சத்தைப் பெறுவதற்கு இந்தக் கந்த ஷஷ்டி விரதம் உகந்ததாகக் கூறப்படுகின்றது.

இன்று ஆரம்பமாகின்ற கந்தஷஷ்டி விரதம் முருகன் எழுந்தருளி வீற்றிருக்கின்ற ஆலயங்களில் சிறப்பாக அதேநேரத்தில் பக்தி பூர்வமாக அனுட்டிக்கப்படும்.  நல்லூர் கந்தசுவாமி கோயில், செல்வச்சந்நிதி முருகன் கோயில், மாவிட்டபுரம் கந்தன் ஆலயம், பொலிகண்டி கந்தவனக் கடவை முருகன் கோயில், கொக்குவில் மஞ்சவனப்பதி முருகன் கோயில், கிருபாகர சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் முதலான திருத்தலங்களில் இன்று கந்தஷஷ்டி விசேட பூஜை ஆராதனை, வழிபாடுகள், திருவிழாக்கள் இடம்பெறும்.இந்த விரதம் நோற்பவர்கள் ஆறுநாள்களும் ஆகாரமேயின்றி வெறும் பச்சைத் தண்ணீர் மட்டும் குடித்தும் இருப்பர். சிலர் மதியம் ஒருபொழுது உணவு எடுத்தும் இரவு பால் பழம் அருந்தியும் இருப்பர். சிலர் ஆறு மிளகும் தண்ணீரும் எடுத்து இருப்பர். இந்த விரதம் ஆறு வருடங்கள் அனுஷ்டிக்க வேண்டும். ‘சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்’ என்றார்கள்.

அதன் விளக்கம் என்னவெனில் சட்டியில் அதாவது கந்தஷஷ்டியில் விரதமிருந்தால் பெண்ணுடைய கர்ப்பப் பையிலே சிசு உருவாகும் என்பதே.திருமணம் ஆகாத ஆண், பெண் இருபாலாரும் மற்றும் விவாகமாகியவர்களும் புத்திரபாக்கியம் இல்லாதவர்களும் இவ்விரதத்தை முறையாக அனுஷ்டிப்பர். விரத காலத்திலே கந்தஷஷ்டி கவசம், கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம் மற்றும் கந்தபுராணம், திருப்புகழ் என்பனவற்றைப் பக்தியுடன் பாராயணஞ் செய்தல் வேண்டும்.

கலியுக வரதனும் கைகளால் தொழுவோர்க்கு கருணை புரிபவருமாகிய முருகப் பெருமான் அருள் சுரக்கும் இக்கந்த ஷஷ்டி விரதத்தை அனுஷ்டித்து கந்தப் பெருமானுடைய கருணைக்குப் பாத்திரமாகலாம்.ஆறுநாள் விரதம் பூர்த்திபண்ணி ஏழாம் நாள் அந்தணர்களுக்குத் தானம் கொடுத்துப் பாறணை பண்ணலாம். இந்த மகிமையுள்ள விரதத்தை முறையாக அனுஷட்டித்து அவனருளாலே அவன்தாள் வணங்கி, சதுர்வித புருஷார்த்தங்களை யடைந்து உலகவாழ்வில் இன்புற்றிருப் போமாக.

சூடான செய்திகள்

புதியவை