korg top cover 0 thwww

karaitivu logo mobile

ஓம் ஜெய் குருவே துணை


ஸ்ரீ நவநாத சித்தர் வரலாறு

ithar nava

'சித்' என்பது அறிவது. சித்தை உடையவர்கள் சித்தர்கள். எனவே அறிவு படைத்தவர்கள் சித்தர்கள், அவர்கள் அறிஞர்கள், மேதைகள், நுண்ணறிவு படைத்தவர்கள், மெஞ்ஞானிகள். மேலும் சித்தர்கள் அட்டமா சித்திகளை பெற்றிருப்பார்கள் எனப் புராணங்கள் கூறுகின்றது. இச்சித்திகள் முப்பெரும் சித்தர்களான ஸ்ரீ நவநாத சித்தர், ஸ்ரீ பெரியானைக்குட்டி சுவாமிகள், ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமிகளிடம் காணப்பட்டமைக்கு பல எடுத்துக்காட்டுக்கள் உண்டு.


மத்திய மலையகத்திலே நாவலப்பிட்டியை அடுத்து கொத்தமலை வீதியில் தலவாக்கலை நோக்கிச் செல்லும் நெடும்பாதையில் அமைந்துள்ளது குயின்ஸ்பரி தோட்டம். குயின்ஸ்பரியில் அமையும் சிவத்தலம் ஸ்ரீ நவநாதேஸ்வரம் ஆகும். ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானம் இணைந்த திருத்தலம் நவநாதேஸ்வரம் ஆகும். சித்தர்கள் பக்தர்களை ஈர்க்கும் வழிபாட்டிடமாகவும், தியாண நிலையமாகவும் அமைவது இந்நவநாதேஸ்வரம். இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்த சித்தர்களுள் நவநாத சித்தரும் ஒருவர். சித்தத்தை சிவன் பால் வைத்தவர்கள் சித்தர்களாவர். நவநாதேஸ்வரத்தின் அற்புதம் என்னவெனில் சுவாமியின் சமாதியில் தோன்றிய சுயம்புலிங்கத் தோற்றப்பாடாகும்.


நவநாதேஸ்வரம் இற்றைக்கு ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுகள் கடந்த 'சமாதி' நிலைநின்ற ஆலயமாகவுள்ளது. அறுபதாண்டுகள் சமாதி நிறைவு பெறுமானால் 'சமாதி' ஆலயம் என்று அழைக்காது 'சிவாலயம்' என்று அழைப்பது மரபு.

( நயினைச் சிவாச்சாரியார் 'ஆகமப்ரவீண' கைலை வாமதேவக் குருக்கள் )


குயின்ஸ்பெரியும் கொல்லிமலையும் நவநாதச் சித்தரது உணர்விலே ஒரே இடமாகவே கருதப்பட்டது என்பது இத்தலவரலாறு முலமாகவும் அனுபவமூலமாகவும் உணரமுடிகின்றது. இங்கு தைப்பொங்கல் தினத்தில் காட்டிலே அமைந்துள்ள குகைக்கருகிலே 'வனபோஜனம்' என்னும் சிறப்பு வழிபாடு நடைபெறுவதுண்டு. இன ஒற்றுமையின் சின்னமாக இவ்விழா இவ்வாலயத்திலே நடைபெறுவதுண்டு. சுவாமிகளது காலத்திலே காளித்தெய்வத்திற்கு இவ்வழிபாட்டை செய்ததாக கூறுகின்றனர். அதாவது குகைக்குச் செல்லும் தனிவழிப்பாதை காட்டுவழிப்பாதையாகும். ஆலயத்தில் இருந்து குகைக்குசெல்ல 2மணித்தியாலம் நடக்கவேண்டியுள்ளது. ஆறுகள் கடந்தும், மலைகள் மீது ஏறியும் இறங்கியும் வினைப்பயன் தீர்க்கவேண்டும். பசியும் ஏற்படும், களைப்பும் நேரிடும், சில இடங்களில் அட்டைகளும் தீண்ட நேரிடும். இவ்வாறு தடைகளை தாண்டி செல்லும் போது சுவாமியின் தியானக்குகை மடமும் திரிசூலக் கோவில் உள்ள இடம் தென்படும்.


இவ்விடமானது பலர் இருந்து வழிபாடு செய்யும் வண்ணம் படிக்கட்டுக்கள் நிறைந்துள்ளது. இவ்வமைப்பானது ஏணிப்படி வடிவில் காணப்படுகின்றமை கலை நுட்பமானதும் அனைவருக்கும் வழிபாடு தென்படும் வகையிலும் அமையப்பட்டுள்ளது. அதனருகில் திரிசூலங்கள் நிறைந்த ஆலயம் காணப்படுகின்றது. திரிசூலங்களுள்ள இடத்திலே உள்ள பாறை இடுக்கில் முட்டைகள் வைக்கும் இடம் காணப்படுகின்றது. வனபோஜன வைபவத்தின் போது பக்தர்கள் பல்லாயிரக் கணக்கில் முட்டைகளை வைப்பர். அவை பின்னர் காணாமற் போவதாகவும் இன்றும் ஐதீகம் உண்டு. இன்றும் இவ்வழமை நிகழ்ந்து வருகிறது. வனபோஜனத்தின் போது மாமிசங்கள்பலியிடப்பட்டு பெருங்கற்பாறை அடுப்பில் வேகவைத்து உணவாக படைத்து இறைவழிபாடு செய்து கூட்டாக இணைந்து உண்பார்கள்.


வருடாவருடம் பங்குனி உத்திரத்தினம் சுவாமியின் குருபூசை கொண்டாடப்படுகிறது. முதல் நாள் இரவு ஏழு மணியளவில் கொடிமரம் முருகனுக்கும், சித்தருக்கும் மன்றாடி விழாவை ஆரம்பிக்கம் முகமாக நாட்டு வீதி அலங்கார வேலையில் ஈடுபடுவர். காலை யாகபூசையின் பின்னர் குயின்ஸ்பரி மக்களால் பால்குடம் மற்றும் பலவகை காவடி எடுத்து சமாதி ஆலயத்தை நோக்கி நடையாக பவனிவருவார்கள். ஆண்களும் பெண்களும் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் ஆடை அணிகலன்கள் அணிந்திருப்பார்கள். சிறுபிள்ளைகள் முதல் முதியவர் வரை பால்குடம் ஏந்தியும், ஆண்கள் பறவக்காவடிகள், முட்காவடிகள், பாற்காவடிகள் எடுத்தும், தெய்வம் ஆடியும், கட்டுப்பாடல்கள் பாடியவாறும், அரோகரா கோசத்துடனும் தங்கள் பக்தியை வெளிப்படுத்தி ஆலயம் நோக்கி ஊர் மக்கள் அனைவருமே செல்வார்கள். அதனைத் தொடர்ந்து பாலாபிஷேகம் நடைபெறும். அதனைத் தொடர்ந்து ஸ்ரீ தேவசேனாதிபதி முருகனுக்கு விசேடபூசைகள் இடம்பெறும். அதன் பின்னரே சித்தருக்கும் நாகபூஷனி அம்மனுக்கும் பூசைகள் இடம்பெறும். சுவாமிகள் இலங்கைக்கு வருகை தரும் போது உடுத்திருந்த பொக்கிஷமான ஆடையை சமாதி அருகில் வைத்து பூசை செய்வார்கள். பிரசாதமாக விபூதி, தீர்த்தம் பகிரப்படும். பின்னர் வருகை தந்த அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படும். மாலை 7மணியளவில் இடும்பன் பூசையுடன் குருபூசை நிகழ்வுகள் இனிதே நிறைவு பெறும்.


கொழும்பு மாநகரிலே ஸ்ரீ சம்மாங் கோட்டார் கோயிலைக் கட்டிய சிற்பிகளே 1928 ஆம் ஆண்டு குணின்ஸ்பரி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தையும் அழகுற அமைத்தனர் என்பது இத்திருத்தலத்தின் பூர்வீக வரலாறு. இதற்கான கற்கள் இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்டது. திருமதி நாகன் பெருமாள் அம்மையாரும் அவரின் வழித்தோன்றல்களும் இவ்வாலயத்தைப் பரிபாலித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


திருச்சி ஜில்லா பச்சைப் பெருமாள்பட்டி என்ற கிராமத்தில் சமீபமுள்ள கரிகாலி என்ற கிராமத்தில் பிரபல கங்காணியாக இருந்தவர் நாகன் கங்காணியாவார். அவரது பத்தினியாராகிய பெருமாளம்மாள் என்ற அம்மையாரும், கொல்லிமலைச்சித்தர் குழாத்துள் ஒருவராகிய நவநாதசித்தர் என்ற – மானம்பாக்கிச் சுவாமிகளை அன்போடு ஆதரித்து உபசரித்து வந்தனர். பச்சைப்பெருமாள் பட்டியில் வீதியில் விளையாடிக் கொண்டிருந்த சிவகாமசுந்தரி என்ற பெண் குழந்தையை எடுத்து அணைத்து உச்சிமோர்ந்து ஸ்பரிச, வாசக, நயண தீட்ஷைகளால் அருள்புரிந்தார் ஸ்ரீ நவநாதசித்தர்.


அம்மையார் ஒருநாள் சுவாமிக்கு உணவு கொடுக்கும் போது சிலோனில் தாம் ஒரு கோயில் கட்டுவதாகவும் அது சுப்பிரமணியர் கோயில் என்றும் சுவாமி கட்டாயம் குமாபாபிஷேகத்துக்கு வரவேண்டும் என்றும் வேண்டினார். அதற்கு சுவாமி 'ஆயா நெனெச்சா அடிமை வரும்' என்று கூறினார்கள். அம்மையார் குயின்ஸ்பெரியில் வந்து மாதக்கணக்காகியதும் கும்பாபிஷேகம் செய்ய ஆயத்தங்கள் நடைபெற்றன. மகன் மூலம் கடிதம் எழுதப்பட்டது. கடிதம் எழுதினாலும் சிலோனுக்கு வர இரண்டு மூன்று வாரங்கள் பிடிக்கும் என மகன் கூறியும் கேட்காமல். கடிதத்தை போடும்படி பணித்தாள். சுவாமியின் சக்தியை உணர்ந்த அம்மையார் அடுத்தநாட்காலை கும்பாபிஷேகத்துக்கு செல்லும் போது எதிரே சுவாமி காட்சி கொடுத்தார்கள். 'சுவாமி நேற்றைக்குத்தானே கடிதம் எழுதினேன். தாங்கள் எப்படி வந்தீர்கள்? என்று கேட்க ' ஆயா நினைச்சுது அடிமை வந்திட்டுது' என்றார்கள். அம்மையாரிடம் கோயிலுக்கு முன்பாக வலது பக்கத்தில் கோணத்திசையாக உள்ள ஒரு இடத்திற்தான் அடியேனைச் சமாதிவைக்க வேண்டும் என்று கூறினார்கள்.


சுவாமி ஒரு நாள் தோட்டத்துக்கங்காணி ஒருவரைச் சந்திக்கத் தனியாக சென்றார். அவ்வேளை தேயிலைச் செடிநடுவில் கஞ்சா குடிப்பதற்காக மூவர் மறைந்திருந்தனர். சுவாமியை கண்டதும் அவரை கஞ்சா குடிக்கும்படி வற்புறுத்தினர். அவர்கள் விடாததால் சுவாமியும் இணங்கிக் குடித்து அப்புகையை அவர்கள் முகத்தில் ஊதிவிட்டார். அவர்கள் மூவரும் மயங்கி விட்டனர். அந்த மூவரின் உற்றார் உறவினர் அவர்களைத் தேடி ஊரெங்கும் அலைந்தனர். கடைசியாக மூவரும் மயங்கிய நிலையில் நாவலப்பிட்டி ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். அங்கும் உணர்வு வராததால் அவர்கள் கண்டி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். இவர்கள் சுவாமியுடன் தகாத முறையில் நடந்து கொண்டதற்காகத்தான் இப்படி ஏற்பட்டது என்ற செய்தி வெளியாகிப் பரவியது.


அதைக் கேள்வியுற்ற உறவினர் சுவாமிகளிடம் சென்று விசாரிக்க அப்படி எதுவும் நடைபெறவில்லையென்று சுவாமி கூறிவிட்டார். நான்கைந்து நாட்கள் சென்றும் மயக்கம் தெளியாததால் மீண்டும் உறவினர் சுவாமியிடம் சென்று மன்றாடினர். சுவாமிகள் அவர்களின் நிலைக்காகப் பரிந்து ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்துப் புகையை ஊதிவிட்டு நீங்கள் கவலையில்லாமல் செல்லுங்கள் என்றார். அதே நேரம் வைத்தியசாலையில் மயங்கிய மூவரும் மயக்கம் தெளிந்து எழுந்தனர். இதற்குப் பின் தோட்டத்தொழிலாளர்களுக்கு சுவாமி மீது பெருமதிப்பும் மரியாதையும் உண்டாகின. சுவாமியை சந்திக்க யார் வந்தாலும் கங்காணியார் குடும்பத்தினர் அவர்களை ஆதரித்து உணவும் தங்குமிட வசதியும் அளித்து வந்தார்.


நவநாத சித்தர் உடம்பு முழுவதும் மூடியவாறு நூல் ஆடை அணிவார்கள். இவ்வாடையில் சில இன்றும் பாதுகாக்கப்பட்டு குருபூஜை தினத்தன்று சுவாமியின் சமாதியின் மேல் வைத்து பூஜிக்கப்பட்டு வருகின்றது. நவநாதசித்தர் விசேடமாக அறுசுவை உண்டியிலே விருப்பமில்லாதவர். வீரம், பூரம், பாஷாணம் முதலியவற்றை ஓரளவு கொண்டுவரச் செய்து அவற்றை உணவாக அருந்துவார்கள். சித்திபெற்ற உடல் வடிவினராகையால் அணிமா, மகிமா, கரிமா, லகிமா, பிராப்தி, பிரகாமியம், ஈசத்துவம், வசித்துவம் என்ற அட்டமாசித்திகளும் நவநாதசித்தரிடம் காணப்பட்டன.


பாலர், பேயர், பித்தரைப்போல் நடித்து மழலைச் சொற்களால் வசனிப்பார். நவநாதசித்தர் காமக்குரோதத்தினாற் பீடிக்கப்படாமல் அநவரதமும் பரவெளியே நாட்டமாகக் கருவி கரணங்களை அடக்கி இமையா நாட்டத்தோடு சாம்பவி முத்திரை தாங்கி கச்சநீட்டையில் வீற்றிருப்பார். இவ்வாறு ஆறு மாதங்கள் சென்று ஒரு தினம் அன்பர்கள் அனைவருங்கூடிச் சித்தருக்கு விசேடமான அபிசேகம் செய்யக் கருதி நூற்றெட்டுக்குடம் காவேரித் தீர்த்தம் கொண்டுவந்து அபிசேகத் திரவியங்கள் அனைத்தும் சேகரித்துச் சித்தருக்கு அபிசேகித்துப் பல ஏழைகளுக்கு அன்னமிட்டு வாத்திய கோஷத்துடன் ஆராதனைகள் செய்யும் போது அதனைத் தரிசிக்க வந்த சேலம் வாசி ஒருவர் 'இந்த நவநாதசித்தரை ஆறுமாதத்திற்கு முன் தாங்கள் சேலப்பக்கத்தில் சமாதியெய்ததாக தெரிவித்தார்'. அதனை சித்தரிடம் விசாரித்ததில் சித்தர் புன்சிரிப்புடன் ' இருக்குமப்பா ' என்றார்கள். ஆலத்துடையான் பட்டியில் ஊற்றில்லாத கிணற்றுக்கு சக்கரமொன்றைத் தகட்டில் வரைந்து கிணற்றிலிட்டு நீர் வற்றாது ஊறச் செய்தார்.


பச்சைப்பெருமாள்பட்டியில் செட்டியார் ஒருவர் நவநாதச் சித்தரைப் பரிகசித்த போதும், 'அவர் மிகவும் நல்லவர்' என்று புகழ்வது போற் பழித்தார். சிறிதுகாலத்திலேயே அக்குடும்பம் நாசமானதை யாவரும் அறிவர் என்றும் கூறப்படுகின்றது. நவநாதசித்தர் 'வானம்பாகிச்சுவாமி', 'எட்டிக்கொட்டைச்சுவாமி' என்றும் அழைக்கப்பட்டார்கள். பச்சிலையாற் பிணி தீர்ப்பதில் நிகரற்றவர் நவநாதசித்தர். எப்போதும் யோகநிஷ்டையில் இருப்பது நவநாதசித்தரின் இயல்பு. சுமார் மூன்று தினங்கள் கூட நிஷ்டையிலே இருக்கும் பேராற்றல் இவருக்குண்டு. எட்டிக்கொட்டையை நவநாதசித்தர் அடிக்கடி சாப்பிடுவதுண்டு. நவநாதசித்தர் ஒவ்வொரு வீட்டிலும் இரண்டொரு கவளத்துக்கு மேல் சாப்பிடுவதில்லை. சில தடவைகளில் 'கிருஷ்ணா... கிருஷ்ணா..' என்று பக்தியுடன் சொல்லுவார்கள்.


நவநாதசித்தர் சிறுபிள்ளைகளைக் கண்டபோதெல்லாம் கற்கண்டு, கடலைப்பருப்பு என்பன வரும்படி செய்து கொடுப்பதுண்டு. 'நவநாதச்சித்தர் அடியார் பெருமையைப் பேணிப்பாதுகாக்கும் முறையைத் தாம் இருந்த இல்லத்தின் மூலமாகத் தம்மை நாடிவந்தோர்க்ககெல்லாம் விளங்கவைத்தார். ஒருவருக்குச் சமைத்த உணவை ஒன்பதின்மருக்குக் கொடுக்கமுடியும் என்பதைக் செயலிற் காட்டியவர்கள். உள்ளன்போடு கொடுக்கும் போது எவ்விதக்குறையும் ஏற்படுவதில்லை என்பதை விளக்கியவர்கள். ஈத்துவக்கும் இன்பத்தை மக்கள் மத்தியில் காட்டிவைத்தவர்கள்'. (பேராசிரியர், கலாநிதி, சு.வித்தியானந்தன் அவர்களின் 'முப்பெருஞ்சித்தர்கள்' )


அருணகிரிநாதர் பாடிய மயில்வகுப்பில்,


' பூதரொடு கந்தரவர் நாதரொடு கிம்புருடர்

பூரண கணங்களொடு வந்துதொழவே '

என்று தேவலோக அடியார்களே நவநாதர்கள் என்று கருதியுரைக்கின்றார். இங்கு ஓர் பேருண்மை பெயர்களிலே பொதிந்துகிடப்பதையும் நாம் கூர்ந்து நோக்குதல் வேண்டும். அருணகிரிநாதர் என்பதிலும் நாத(ம்) வருகிறது. நவநாதர் என்பதிலும் நாத(ம்) வருகிறது. கலைஞானம், கல்விஞானம், நாதஞானம் தருபவர் நவநாதசித்தசிவன் ஆவார்.


இவ்வாறு அட்டமா சித்துக்கள் செய்து பெரும்புகழ் ஈட்டவல்லவராக இருந்தும் அடியாருக்கு அடியாராகத் தோன்றிப் பாமர மக்களின் மத்தியில் தான் ஒரு பாமரனாகவே தோன்றிப் பக்தியை வளர்த்தார். 1902ஆம் ஆண்டு பங்குனித்திங்கள் பூரணையில் நிரம்பிய உத்தர நட்ஷத்திரத்தில் தாம் ஏற்கனவே கூறப்பட்ட நேரத்தில் நிர்விகர்ப்ப நிலையடைந்தார்கள்.


நவநாதம் என்று சொல்லப்பா நாவினால் - உன்தன்

நெஞ்சம் குளிர்ந்து வாழ்ந்திடுவாயப்பா...!!

தொகுப்பு :-

வைரமுத்து சத்தியமாறன் (B.A)

சித்தானைக்குட்டி புரம்,

காரைதீவு-03.

சூடான செய்திகள்*

புதியவை