This poem was written for the magazine "Ilanthentral - 2008"
துடுப்பு தேடும் உறவுகள்
ஆகாய கருவண்டுக்கூட்டம்
அண்மை வானில் வட்டமிட்டு
பொழிந்த குண்டுமழையில்
அழிந்தது அயல் வீடு
என்வீட்டுக்கு மழை வேண்டாம்
இனியுமொரு துன்பம் வேண்டாம்
இறைவா இங்கே வந்துவிடு
அல்லலுற்றேன் அதுகண்டு
கட்டியவளை அணைத்துக்கொண்டேன்
கைக்கெட்டியதை பிடித்துக்கொண்டேன்
தப்பிவிட வேண்டுமென்று
அகதி அந்தஸ்த்து பெற்றுக்கொண்டேன்
என் வீட்டு முற்றத்தில்
இருந்ததொரு வாழைத்தோட்டம்
ஒரு குண்டில் உடல் சிதறி
உருக்குலைந்தது அந்த ஏழைத்தோட்டம்
விட்டுக்கொல்லையில் ஒரு மாட்டுப்பண்ணை
அழுகுரல் கேட்டு அருகில் வந்தேன்
‘‘நீங்களும் மாண்டிடுங்கள்‘‘
என்றுவிட்டு விலகிவந்தேன்
போய்க்கொள்ள ஒரு வழியுமில்லை
தூரத்தில் எந்த ஒளியுமில்லை
வேறுவழி காட்டவென்று
அங்கோர் படகோட்டி நின்றிருந்தான்
அருகில் சென்றேன் ஆம் என்றான்
அக்கரை செல்ல வேண்டும் என்றேன்
இக்கரையும் இனியும் வேண்டாம்
கூட்டிச்சென்றிடுவாய் என்றுரைத்தேன்.
நடுக்கடலில் நம் பயணம்
ஓட்டிடுவேன் உயிரை வைத்து
எனக்கும் உண்டு பிள்ளை குட்டி- அதனால்
தரவேண்டும் ஏதும் என்றான்.
ஐயோ என்ன கொடுமை இது
அடித்தது நெருப்பு மழை
அகப்பட்டது ஒன்றுமில்லை
ஏழையானின் இன்னல் தீர
காட்ட வேண்டும் கருணை என்றேன்.
சரியென சமாளித்து
கூலியேதும் வேண்டாம் அந்த
தாலி மட்டும் தந்துவிடு
வழிகாட்டிடுவேன் நானும் என்று
வயிற்றிலடித்தான் படகோட்டி.
சொன்ன கதை கேட்டு
சோகத்தில் ஆழ்ந்தது இரண்டு மனம்
காவல் காரன் திரும்பிப்பார்க்க
கழற்றி நின்றாள் கனவுமாது.
துடுப்புகள் வலித்துக்கொள்ள
துவண்ட மனமிரண்டு சலித்துக்கொள்ள – இன்னும்
பாக்கு நீரிணை கடக்க வேண்டும்
பாரதம் புகுந்திட வேண்டும்
காந்திமகான் வாழ்ந்த நாடு
கலைகளில் செழித்த நாடு
நான்கொண்ட கவலை தீர
தந்திடுமா எனக்கோர் வீடு?
-காரையம்சன்-