நவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் ! - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

சனி, 28 செப்டம்பர், 2019

நவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் !


நவராத்திரி எனும் ஒன்பது நாட்கள் அம்பாளின் வெவ்வேறு அவதாரங்களை
 அலங்கரித்து, கொலு வைத்து கொண்டாடப்பட்டு வருவது வழக்கம்.

சிவனை வழிபடக்கூடியது சிவராத்திரி என்றும், அம்பாளை வழிபடுவதற்கு நவராத்திரி என நம் இந்து மதத்தில் ஒரு விழாவாக கடைப்பிடித்து வருகின்றோம்.

நவராத்திரி என்றால் என்ன?
சர்வம் சக்தி மயம் என கூறுவது வழக்கம். நவராத்திரி என்றால் ஒன்பது இரவு பொருள் உண்டு. நவ என்றால் ஒன்பது என்றும், புதுமை என்ற அர்த்தம் உண்டு. ஒன்பது ராத்திரிகள் அம்பிகையை வழிபடக்கூடிய உன்னதமான விழா தான் இந்த நவராத்திரி திருவிழா.

நவராத்திரியின் நோக்கம் என்ன?
அம்பாள் மகிசாசூரனை வதம் செய்வதற்காக இந்த ஒன்பது நாட்கள் தவம் நோற்ற காலம் தான் இந்த நவராத்திரி. முப்பெரும் தேவியர்களான மலைமகள், அலைமகள், கலைமகள் இந்த மூன்று தேவியரும் ஒரு ரூபமாக வந்து மகிசாசூரனை வதம் செய்த திருவிழா தான் இந்த நவராத்திரி.

இதன் மூலம் சொல்லப்படும் தாத்பரிகம் என்ன என்பதை தெரிந்து கொண்டால் நம் வாழ்க்கையின் இன்னல்கள் போக்க நமக்கு ஒரு விடை கிடைக்கும்.

நாம் நம்மிடம் இருக்கும் நல்ல விஷயங்களை எல்லாம் ஒன்று சேர்த்து, நம்மிடம் இருக்கும் கெட்ட எண்ணங்களை அழிப்பதற்காக நம்மை பக்குவப்படுத்தக் கூடிய தவக்காலமாக இந்த நவராத்திரி காலத்தை எடுத்துக் கொள்ளலாம்.

நவராத்திரி எப்படி கொண்டாடுவது?
நவராத்திரி தினத்தில் நாம் கொலு வைப்பது வழக்கமாக வைத்துள்ளோம்.
அதோடு இந்த நவராத்திரி தினங்களில் விரதம் இருந்து அம்மனை வழிபடுவது வழக்கம்.
தினமும் ஒரு அம்பிகையின் அவதாரத்தை வழிபடுவது வழக்கமாக இருக்கின்றது.
நவராத்திரி தினங்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தானியங்களால் நெய்வேத்யம் செய்து அம்பாளுக்குப் படைத்து, அதை அருகில் உள்ளவர்களுக்கு கொடுப்பது வழக்கம்.

ஆரோக்கியத்தைக் காக்கும் நவராத்திரி விழா:
புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரி திருவிழா மிக முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது. கன்னி ராசியின் அதிபதியான புதன் பகவானின் மாதமாக இந்த புரட்டாசி மாதம் விளங்குவதாலும், இவர் சைவ கடவுளாகப் பார்க்கப்படுகின்றார். இந்த புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடக்கூடாது என முன்னோர்கள் கூறுவது வழக்கம்.

வெயில் காலம், காற்று காலம், மழைக் காலம் என இருக்கும் நிலையில், இந்த புரட்டாசி மாதத்தில் மழையால் ஏற்பட்ட குளிர்ச்சியால், பூமி இத்தனை நாட்களாக உட்கிரகித்திருந்த வெப்பத்தை வெளியிடும் காலம். இதனால் நம் உடலுக்கு உஷ்ணம் அதிகமாகும். இந்த காலத்தில் அசைவம் சாப்பிட்டால் மேலும் உஷ்ணம் அதிகரித்து வியாதிகளை ஏற்படுத்தும்.

நவராத்திரி விழாவில் ஒவ்வொரு தினத்தில் செய்ய வேண்டிய பூஜை மற்றும் பிரசாதங்களின் விபரம்

நாம் இந்த காலத்தில் கொண்டாடப்படும் நவராத்திரி விழாவின் போது, பிரசாதமாக வழங்கப்படும் தானியங்களால் ஆன பிரசாதம் நம் உடலுக்கு தேவையான ஆரோக்கியம் கொடுத்து, உடலை வலுப்படுத்தவல்லது.

இதனால் நவராத்திரி விழாவை நாம் வெறும் ஆன்மிக ரீதியாகப் பார்க்காமல், அதை அறிவியல் ரீதியாகவும் பார்த்து அதன் பாரம்பரியத்தைக் காத்து, நம் தலைமுறையை பாரம்பரியத்தோடு வளர்ப்பது நம் கடமை.

Post Bottom Ad

Responsive Ads Here

Pages